உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: புதின் அறிவிப்பு
|உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ,
ரஷியா- உக்ரைன் இடையே கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருவதால் இந்த போர் 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால், சர்வதேச அளவிலும் பல்வேறு பொருளதார நெருக்கடி நிலவுகிறது. ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று புதின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக புதின் கூறுகையில், இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடுகளுக்கு ரஷியா மதிப்பளிக்கிறது. உக்ரைன் போர் தொடர்பாக இந்த நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளேன். பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உக்ரைன் விரும்பினால் நான் தயாராக இருக்கிறேன். இதற்கு, இந்தியா, சீனா, பிரேசில் நாடுகள் மத்தியஸ்தம் செய்ய வேண்டும்" என்று கூறினார்.