பிணைக்கைதிகளை மீட்போம்; போரில் வெற்றி பெறுவோம் - இஸ்ரேல் பிரதமர் சூளுரை
|ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
ஜெருசலேம்,
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரம் மீது இஸ்ரேல் கடந்த அக்டோர் மாதம் 7-ந்தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. போர் தொடங்கிய சமயத்தில் வடக்கு காசாவை குறிவைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் பின்னர் தெற்கு காசாவை நோக்கி தாக்குதல்களை விரிவுப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக மத்திய காசாவில் இஸ்ரேல் ராணுவம் தரைவழியாகவும், வான்வழியாகவும் தீவிரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த ஆக்ரோஷமான தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன
பல மாதங்களாக நடந்து வரும் இந்த போரில் காசாவில் மட்டுமே சுமார் 22 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அங்கு தங்களுக்கு வெற்றி கிடைக்கும் எனவும், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்து விடுவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு உறுதிபட தெரிவித்து உள்ளார்.
டெல் அவிவில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் 100-க்கு மேற்பட்ட பாலஸ்தீன பயங்கரவாதிகளை கொன்று குவித்தனர். நாள்தோறும் ஏராளமான பயங்கரவாதிகள் வேட்டையாடப்படுகின்றனர். ஹமாசை நாங்கள் முற்றிலும் ஒழித்து விட்டு எங்கள் பிணைக்கைதிகளை மீட்போம். போரில் வெற்றி பெறுவோம்' என சூளுரைத்தார்.