< Back
உலக செய்திகள்
காசாவின் ரபா நகரை கைப்பற்றியே தீருவோம்: இஸ்ரேல் பிரதமர் சூளுரை - அமெரிக்கா எதிர்ப்பு
உலக செய்திகள்

காசாவின் ரபா நகரை கைப்பற்றியே தீருவோம்: இஸ்ரேல் பிரதமர் சூளுரை - அமெரிக்கா எதிர்ப்பு

தினத்தந்தி
|
10 April 2024 1:45 AM IST

காசாவின் ரபா நகருக்குள் தரைப்படையை அனுப்பி அந்த நகரை ஆக்கிரமிப்பது உறுதி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சூளுரைத்தார்.

ஜெருசலேம்,

பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டின் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசியதுடன் அந்த நாட்டுக்குள் ஊடுருவி கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை அடியோடு ஒழிப்பதாக சூளுரைத்து காசா மீது போரை தொடங்கியது. 6 மாதங்களை கடந்த பிறகும் இந்த போர் முடிவின்றி நீண்டு வருகிறது.

ரபா நகரை ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டையாக கருதும் இஸ்ரேல் அங்கு தனது தரைப்படையை அனுப்பி அந்த நகரை ஆக்கிரமிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

இந்த நிலையில் காசாவின் ரபா நகருக்குள் தரைப்படையை அனுப்பி அந்த நகரை ஆக்கிரமிப்பது உறுதி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சூளுரைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் "ஹமாஸ் உடனான போரில் வெற்றிப்பெறுவதற்கு ரபா நகரை கட்டுப்பாட்டில் எடுப்பது அவசியம். அது நடக்கும், அதற்கான ஒரு நாள் உள்ளது" என கூறினார்.

பெஞ்சமின் நேதன்யாகுவின் இந்த பேச்சுக்கு அமெரிக்கா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ரபாவுக்கு தரைப்படையை அனுப்புவது மிகப்பெரிய தவறு என்றும், அங்குள்ள பொதுமக்களை பாதுகாப்பதற்கான நம்பகமான திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியம் எனவும் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்