< Back
உலக செய்திகள்
காசா போருக்கு பின் இஸ்ரேலின் திட்டம் என்ன?  விவரங்களை வெளியிட்ட நேதன்யாகு
உலக செய்திகள்

காசா போருக்கு பின் இஸ்ரேலின் திட்டம் என்ன? விவரங்களை வெளியிட்ட நேதன்யாகு

தினத்தந்தி
|
23 Feb 2024 3:47 PM IST

பாதுகாப்பு அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில், காசா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் சுதந்திரமாக செயல்படும் என நேதன்யாகு தனது திட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம்:

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் இடைவிடாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்நிலையில், காசா போருக்கு பிந்தைய திட்டம் குறித்த விவரங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வெளியிட்டிருக்கிறார். பிரதமர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட இந்த திட்டம், கேபினட் மந்திரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க எந்த அம்சமும் இல்லாவிட்டாலும், போருக்குப் பிந்தைய முறையான பார்வையை நேதன்யாகு முதன்முறையாக முன்வைத்திருக்கிறார். இந்த திட்டத்தில், காசாவை நிர்வகிப்பதில் இஸ்ரேலிய பங்கை நேதன்யாகு வலியுறுத்தி உள்ளார்.

அதாவது, ஹமாஸ் மீதான போர் முடிவடைந்த பின்னர் ராணுவம் விலக்கப்பட்ட காசா முனையின் பாதுகாப்பு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், சிவில் விவகாரங்களில் இஸ்ரேல் பங்கு வகிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில், காசா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் சுதந்திரமாக செயல்படும். மேலும், காசாவிற்குள் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை நிறுவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கலாம் என கூறப்படுகிறது.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அல்லது அமைப்புகளுடன் தொடர்பில் இல்லாத மற்றும் அவர்களிடமிருந்து நிதியுதவி பெறாத உள்ளூர் அதிகாரிகளால் காசா நிர்வகிக்கப்படும் என்றும் இந்த திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளளது.

ஆனால் இந்த திட்டத்திற்கு பாலஸ்தீனியர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வார்களா என்பது தெளிவாக தெரியவில்லை. பல ஆண்டுகளாக, தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பாலஸ்தீனிய ஆளும் அமைப்புகளை உருவாக்க இஸ்ரேல் பலமுறை முயற்சி செய்து தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீன சமூகத்தில் ஆழமாக வேரூன்றிவிட்டனர். எனவே, அவர்களை முற்றாக ஒழிக்கவேண்டும் என்ற இலக்கை இஸ்ரேல் அடைய முடியாது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்