< Back
உலக செய்திகள்
காசா போரில் நெதன்யாகு தவறு செய்கிறார் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
உலக செய்திகள்

காசா போரில் நெதன்யாகு தவறு செய்கிறார் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

தினத்தந்தி
|
10 April 2024 12:51 PM IST

காசா போரில் நெதன்யாகு தவறு செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனாலும், இன்னும் 130 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில் 30 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும், அவர்களின் உடல்கள் ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 33 ஆயிரத்து 360 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 450 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியது முதல் காசா முனையில் தற்போது நடந்துவரும் போரில் இதுவரை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் 604 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகளின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்தில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் விரைவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, காசா முனையில் கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் உலக மத்திய சமையல் அறை என்ற தன்னார்வு தொண்டு அமைப்பை சேர்ந்த ஊழியர்கள் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேவேளை, காசா முனையின் உள்ள ராபா நகரில் விரைவில் தாக்குதலை நடத்துவோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காசா போரில் நெதன்யாகு தவறு செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் இஸ்ரேல் - ஹமாஸ் போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ஜோ பைடன் கூறியதாவது,

காசா போரில் பிரதமர் நெதன்யாகு தவறு செய்கிறார் என்று நினைக்கிறேன். போரை அவர் கையாளும் விதத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நிவாரண உதவிகள் வழங்கும் அமைப்பின் வாகனம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது மூர்க்கத்தனமானது.

காசா மீதான போரை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்த வேண்டுமென நான் அழைப்பு விடுக்கிறேன். காசாவுக்குள் 6 முதல் 8 வாரங்கள் நிவாரண பொருட்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். உணவு, மருந்து பொருட்கள் செல்ல முழு அனுமதி அளிக்க வேண்டும். காசாவுக்குள் நிவாரண பொருட்கள் செல்லவிடாமல் இஸ்ரேல் தடுக்கிறது. நிவாரண பொருட்கள் விநியோகத்தையும் தடுக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்