நேபாளம்: 57 லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லா, தட்டம்மை தடுப்பூசி போட இலக்கு
|நாடு முழுவதும் 48,798 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு, 49,937 சுகாதார பணியாளர்கள் மற்றும் 59,906 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
காத்மண்டு,
நேபாளத்தில் நாடு முழுவதும் உள்ள 57 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடுவது என அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது.
இதற்காக வருகிற மார்ச் 20-ந்தேதி வரை தேசிய அளவில் தடுப்பூசி முகாம்கள் செயல்படும். இதில், இந்திய எல்லை மற்றும் காத்மண்டு பள்ளத்தாக்கிற்கு உட்பட்ட 3 மாவட்டங்கள் என அதிகம் தொற்று பாதித்த 21 பகுதிகள் உள்பட 24 மாவட்டங்களில் இந்த தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும்.
இதன்படி, 9 மாத குழந்தைகள் முதல் 15 வயது வரையிலான நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, மீதமுள்ள 53 மாவட்டங்களை சேர்ந்த 9 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.
இது பூஸ்டர் டோசாக போடப்படும். இதற்காக, பள்ளி கூடங்களில் மையம் அமைக்கப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
நாடு முழுவதும் மொத்தம் 48,798 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு, 49,937 சுகாதார பணியாளர்கள் மற்றும் 59,906 தன்னார்வலர்கள் இதற்கான பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
கடந்த 2023-ம் ஆண்டு 690 பேருக்கு தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டு, அதில் உயிரிழப்பு ஒன்றும் ஏற்பட்டது. 2004-ம் ஆண்டு அதிக அளவாக 12 ஆயிரம் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.