பதவி விலக மாட்டேன்...நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவேன் - நேபாள பிரதமர் பிரசந்தா
|நேபாளி காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்- யுஎம்எல் கட்சியும் தற்போது புதிய கூட்டணி ஆட்சி அமைக்க தீர்மானித்துள்ளது.
காத்மாண்டு,
நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற முடியாமல் போனது. இதனால், சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
நேபாள பிரதமராக இருக்கும் புஷ்பா கமல் தாஹல் பிரசந்தாவின் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேபாளி காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்- யுஎம்எல் கட்சியும் தற்போது புதிய கூட்டணி ஆட்சி அமைக்க தீர்மானித்துள்ளதுதான் இதற்கு காரணம். நேபாளி காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் டியூபாவும், சிபிஎன்-யுஎம்எல் தலைவர் ஒலி-யும் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆட்சி காலத்தில் பிரதமர் பதவியை இரு கட்சிகளும் சமமாக பிரித்துக்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நேபாள அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தால், ஆளும் சி.பி.என். மாவோயிஸ்டு, அதிகாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், நேபாளின் பலுவத்தாரில் நேற்று நடைபெற்ற சி.பி.என். மாவோயிஸ்டு கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பிரதமர் பிரசந்தா பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அக்கட்சியின் செயலாளர் கணேஷ் ஷா தெரிவித்துள்ளார்.
தற்போது கூட்டணி அமைத்துள்ள நேபாளி காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்-யுஎம்எல் கட்சியும் 167 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. ஆனால், பெரும்பான்மைக்கு 138 இடங்களே போதுமானதாகும். அரசியலமைப்பு விதியின்படி, பிரதிநிதிகள் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர பிரதமருக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளதால், அதற்குள் அவர் ஏதாவது செய்தால் புதிய அரசு அமைவதை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.