நேபாளம்; ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 7 பேர் பலி
|பஸ்சானது திரிசூலி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில், பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினார்கள்.
காத்மண்டு,
நேபாள நாட்டில் பஸ் ஒன்று, தலைநகர் காத்மண்டுவை நோக்கி இன்று காலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 48 பேர் பயணம் செய்தனர்.
அப்போது, தடிங் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதில், பஸ்சானது திரிசூலி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினார்கள். அவர்களை காப்பாற்ற அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடினர். இந்த நிலையில், ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் பயணிகள் பலரும் நீருக்குள் மூழ்கினர்.
இதில், 5 பேர் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தனர். இதனால், விபத்தில் மொத்தம் 7 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். விபத்தில், 30 பேர் காயமடைந்தனர்.
இதுபற்றி மாவட்ட காவல் துறை உயரதிகாரி கே.சி. கவுதம் கூறும்போது, சரியான சாலை வசதி இல்லாததே விபத்திற்கு காரணம் என பஸ் ஓட்டுநர் கூறியுள்ளார். இந்த விபத்திற்கான காரணம் பற்றி நாங்கள் விசாரித்து வருகிறோம் என கூறினார்.
நேபாளத்தில் ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். சரியான சாலை வசதி இல்லாதது, பராமரிப்பற்ற வாகனங்கள், அதிகப்பளு உள்ளிட்ட காரணங்களால் இந்த சாலை விபத்துகள் நடக்கின்றன.