< Back
உலக செய்திகள்
இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தான் திரும்புகிறார் நவாஸ் ஷெரீப்...!
உலக செய்திகள்

இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தான் திரும்புகிறார் நவாஸ் ஷெரீப்...!

தினத்தந்தி
|
16 Aug 2022 6:14 PM IST

இங்கிலாந்தில் வசித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அடுத்த மாதம் தாயகம் திரும்ப உள்ளதாக அந்நாட்டு ஜாவெத் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான அவர் மீது பனாமா ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் கோர்ட்டில் தொடரப்பட்டன.

ஊழல் வழக்கில் சிக்கிய நவாஸ் ஷெரீப்க்கு அந்நாட்டு நீதிமன்றம் கடந்த 2018ல் 7 ஆண்டு கால சிறை தண்டனை விதித்தது. மற்றொரு ஊழல் வழக்கிலும் அவருக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. மொத்தம் 11 ஆண்டு கால சிறை தண்டனை, 130 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை அடுத்து அவர் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றார். எனினும், கீழமை நீதிமன்றம் அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, அவரது உடல்நிலையைக் காரணம் காட்டி அவருக்கு உயர் சிகிச்சையைப் பெற வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்று லாகூர் ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி நவாஸ் ஷெரீப் லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அதன் பிறகு அவர் நாடு திரும்ப இல்லை.

இந்நிலையில், பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இம்ரான் கான் பதவி விலகி, நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்றார். பாகிஸ்தான் அரசியல் சூழல் மாறியதை அடுத்து நவாஸ் ஷெரீப் மீண்டும் தாயகம் திரும்புவார் என பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

தற்போது நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட்டை ஷபாஸ் ஷெரீப் அரசு வழங்கியது. இதையடுத்து நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார் பாகிஸ்தான் மத்திய மந்திரி ஜாவித் லத்தீஃப்.

லாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவாஸ் ஷெரீப் வராமல் பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிரான அரசியல் வலுப்படாது. எனவே, அடுத்த மாதம் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக நவாஸ் ஷெரீப் வர வேண்டும் என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியினர் கூறி வரும் நிலையில், அவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சி தரக்கூடியதாக உள்ளதாக கூறப்படுகிறது.

நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் கூறும்போது, "எனது தந்தை நாடு திரும்ப விரும்புகிறேன். ஆனால் அவர் திரும்புவதற்கு சில சிக்கல்கள் தடையாக உள்ளது" என்றார்.

இதற்கிடையே நவாஸ் ஷெரீப் மீதான பனாமா பேப்பர்ஸ் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையை நீக்க உதவும் வகையில் சட்ட திருத்தங்களை கொண்டு வர ஷபாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்புவதற்காக நடவடிக்கை மும்முரமாக நடந்து வருகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் செய்திகள்