5 மாத பயணத்துக்கு பின் விண்வெளியில் இருந்து பத்திரமாக பூமி திரும்பிய 4 வீரர்கள்
|5 மாத பயணத்துக்கு பின் விண்வெளியில் இருந்து 4 வீரர்கள் பத்திரமாக பூமி திரும்பினர்.
வாஷிங்டன்,
அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் கூட்டு முயற்சியில் விண்வெளியில் இயங்கி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர் ஜோஷ் கசாடா மற்றும் வீராங்கனை நிக்கோல் மான், ஜப்பான் விண்வெளி வீரர் கொய்ச்சி வகாடா மற்றும் ரஷிய வீராங்கனை அன்னா கிகினா ஆகிய 4 பேரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'குருவ்-5' விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர். அங்கு இவர்கள் கடந்த 5 மாதங்களாக தங்கியிருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 'குருவ்-5' விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர்.
சுமார் 20 மணி நேர பயணத்துக்கு பின் விண்வெளி வீரர்கள் இருந்த 'குருவ்-5' விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பா கடற்கரையில் பாராசூட் உதவியுடன் பத்திரமாக தரையிறங்கியது. அங்கு தயார் நிலையில் இருந்த அதிகாரிகள் விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் 4 பேரையும் பத்திரமாக வெளியேற்றினர்.