"மக்களுக்காக பேசுவதை விட பெரிய மரியாதை எதுவுமில்லை" -அமெரிக்க சபாநாயகர் பதவியில் இருந்து நான்சி பெலோசி விலகல்!
|அமெரிக்க நாடாளுமன்ற கீழ்சபையில் ஆளும் ஜனநாயக கட்சி பெரும்பான்மை இழந்தது
வாஷிங்டன்,
அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ந் தேதி தேர்தல் நடந்தது.
2024-ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் இந்த தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. அதுமட்டுமின்றி ஜனாதிபதி ஜோ பைடனின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளிக்கிற சான்றிதழாகவும் இந்த தேர்தல் முடிவு அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 8-ந் தேதி நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி செனட் சபையை கைப்பற்றியது. பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் மெலிதான பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களில் 218 இடங்களைக் கைப்பற்றினால் பெரும்பான்மை கிடைக்கும். ஆனால் டிரம்பின் குடியரசு கட்சி குறைந்தபட்சம் 218 இடங்களை குறுகிய பெரும்பான்மையுடன் வெல்லும் என்று அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து குடியரசு கட்சிக்கு ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார்.
குடியரசு கட்சி, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றி விடும் நிலையில், சபாநாயகர் நான்சி பெலோசி, பிரதிநிதிகள் சபையில் சபாநாயகர் மற்றும் ஜனநாயக கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளார்.
அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை, ஜனநாயகக் கட்சிக் கூட்டத்திற்கு புதிய தலைமுறை தலைமை தாங்குவதற்கான நேரம் வந்துவிட்டது அடுத்த காங்கிரசில் நான் தலைமைப் பதவியை நாட மாட்டேன்.இந்த தளத்தில் நின்று சான்பிரான்சிஸ்கோ மக்களுக்காக பேசுவதை விட எனக்கு பெரிய அதிகாரபூர்வ மரியாதை எதுவும் இல்லை. இதை நான் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து செய்வேன்" என்றார்.
இதனை தொடர்ந்து குடியரசு கட்சியின் கெவின் மெக்கார்த்தி பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்ப்பு உள்ளது.