அமெரிக்க வானில் பறந்த மேலும் ஒரு மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது
|அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில் வானில் பறந்த மேலும் ஒரு மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே சீன உளவு பலூன் பறப்பது கடந்த 1-ந் தேதி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின் பேரில் 4-ந் தேதி போர் விமானம் மூலம் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த 10-ந் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 40 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பொருள் பறப்பதை கண்டறிந்த அமெரிக்க ராணுவம் அதை போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியது.
அதை தொடர்ந்து 11-ந் தேதி அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவின் யூகோன் நகரின் வான்பரப்பில் மர்ம பொருள் ஒன்று பறந்த நிலையில், அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் உத்தரவின் பேரில் அமெரிக்க போர் விமானத்தால் அது, சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான ஹூரான் ஏரிக்கு மேல் 20 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பொருள் பறப்பது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்த ராணுவத்துக்கு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார். அதன் பேரில் எப்-16 ரக போர் விமானம் ஏவுகணையை வீசி அந்த மர்ம பொருளை வீழ்த்தியது.
அமெரிக்க வான்பரப்பில் அடுத்தடுத்து மர்ம பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதும், தொடர்ந்து அவை சுட்டுவீழ்த்தப்படுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான ரிலாவ் நகரில் கடலுக்கு மேலே மர்ம பொருள் பறப்பதை கண்டறிந்துள்ளதாகவும், மீனவர்களுக்கு ஆபத்து இல்லாமல் அதை சுட்டு வீழ்த்த தயாராகி வருவதாகவும் சீன கடற்படை தெரிவித்துள்ளது.