வாக்னர் குழு தலைவர் விமான விபத்தில் பலி: படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு..!
|ரஷியாவில் அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு தலைவர் விமான விபத்தில் பலியானார். இவர் படுகொலை செய்யப்பட்டதாக அங்கு குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
மாஸ்கோ,
ரஷியாவில் வாக்னர் குழு என்ற தனியார் ராணுவ அமைப்பு செயல்பட்டு வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து இவர்கள் முக்கிய பங்காற்றினர்.
இந்த வாக்னர் குழுவின் தலைவராக யெவ்ஜெனி பிரிகோஜின் இருந்தார். இவர் அதிபர் விளாடிமிர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். ஆனால் இவர் திடீரென அதிபர் புதினுக்கு எதிராக புரட்சியில் இறங்கினார். அப்போது ரஷியாவின் தெற்கு பகுதியில் உள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் அருகே உள்ள ராணுவ தலைமையகத்தை வாக்னர் குழு கைப்பற்றியது.
தேசத்துரோக வழக்கு
மேலும் ரஷிய அரசாங்கத்தை எதிர்த்து 25 ஆயிரம் வீரர்கள் அணிவகுப்பில் ஈடுபட போவதாக பிரிகோஜின் அறிவித்திருந்தார். ஆனால் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாசென்கோ பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த புரட்சி கைவிடப்பட்டது.
எனினும் பிரிகோஜின் தங்களது முதுகில் குத்தி விட்டதாக புதின் கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து அவர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டு பெலாரஸ் நாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்த அவர் அவ்வப்போது ரஷியாவுக்கு வந்து சென்றார்.
10 பேர் பலி
அதன்படி ரஷியா வந்திருந்த பிரிகோஜின் தனது குழுவினருடன் தனியார் விமானம் மூலம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்துக்கு கிளம்பினார். ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் பிரிகோஜின் உள்பட 10 பேரும் உடல் நசுங்கி பலியாகினர். இந்த விமானம் தீப்பிடித்து எரியும் காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கிடையே அதிபர் புதினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாலேயே பிரிகோஜின் படுகொலை செய்யப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் அங்கு எழுகின்றன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், `இந்த விபத்து குறித்து நான் ஆச்சரியப்படவில்லை' என்று சந்தேகத்தை எழுப்பி உள்ளார். ஆனால் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் இதனை மறுத்துள்ளது.