< Back
உலக செய்திகள்
மியான்மர்: சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு மாற்றப்பட்ட ஆங் சான் சூகி
உலக செய்திகள்

மியான்மர்: சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு மாற்றப்பட்ட ஆங் சான் சூகி

தினத்தந்தி
|
17 April 2024 11:56 AM IST

ஆங் சான் சூகிக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மியான்மர்,

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியவர் ஆங் சான் சூகி (வயது 78). அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இவர் கடந்த 2020-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் தேர்தலில் மோசடி செய்ததாக கூறி அடுத்த ஆண்டே இவரது பதவி பறிபோனது. இதனால் அங்கு மீண்டும் ராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டது. மேலும் 2½ ஆண்டுகளுக்கு அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே ஆங் சான் சூகி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து ஆங் சான் சூகி மீது ராணுவத்துக்கு எதிரான கிளர்ச்சி, ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது தொடர்பாக பல வழக்குகள் அந்த நாட்டின் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இவற்றுள் சில வழக்குகளில் அவருக்கு இதுவரை 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. வெப்ப அலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையிலிருந்து மாற்றப்பட்ட ஆங் சான் சூகி எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்