செவ்வாய் கிரகத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்குவோம்.. எலான் மஸ்க் நம்பிக்கை
|இரண்டு முறை நடத்தப்பட்ட சோதனையின்போது ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறிய நிலையில், அடுத்த மாதம் மூன்றாவது சோதனை நடத்தப்பட உள்ளது.
வாஷிங்டன்:
எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 'ஸ்டார் லிங்க்' செயற்கைக்கோள், விண்வெளி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை இந்த நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
அந்த வகையில் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் வகையில், உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை தயாரித்துள்ளது. 33 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ராக்கெட்டுக்கு 'ஸ்டார்ஷிப்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ராக்கெட் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதற்கட்ட சோதனையின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடித்து சிதறியது. பின்னர் தவறுகள் சரிசெய்யப்பட்டு நவம்பர் மாதம் மீண்டும் சோதனை செய்யப்பட்டது. அப்போது ஆரம்பத்தில் சூப்பர் ஹெவி பூஸ்டர் சரியாக செயல்படுவதுபோல் தோன்றியது. ஆனால் விண்கலம் தனியாக பிரிந்தபிறகு, பூஸ்டர் வெடித்து சிதறியது. இதையடுத்து தவறுகள் சரி செய்யப்பட்டு, மூன்றாவது சோதனையை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் (எப்ஏஏ) அனுமதி அளித்ததும் ராக்கெட் ஏவப்படும்.
இதுபற்றி பேசிய எலான் மஸ்க், மூன்றாவது ஸ்டார்ஷிப் சோதனை வெற்றிகரமாக அமையும் என்றார். மேலும், தனது நிறுவனம் அடுத்த 8 ஆண்டுகளுக்குள் செவ்வாய் கிரகத்தில் ஸ்டார்ஷிப் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கும் என்றும், மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தங்குவதற்கு நிறைய வேலைகள் செய்யவேண்டியிருக்கும் எனவும் அவர் கூறினார்.