< Back
உலக செய்திகள்
கொலைகாரர்..! உங்களுடன் அழைத்து கொள்ளுங்கள்; புதினின் பெற்றோர் கல்லறையில் எழுதிய பெண்
உலக செய்திகள்

கொலைகாரர்..! உங்களுடன் அழைத்து கொள்ளுங்கள்; புதினின் பெற்றோர் கல்லறையில் எழுதிய பெண்

தினத்தந்தி
|
15 Oct 2022 6:37 PM IST

கொலைகாரரை உங்களுடன் அழைத்து கொள்ளுங்கள் என புதினின் பெற்றோர் கல்லறையில் எழுதிய பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.



மாஸ்கோ,


உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் 6 மாத கால போரில் ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் உயிரிழந்தும், பலர் படுகாயமடைந்தும் உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு விட்டு, அகதிகளாக புலம் பெயர்ந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், ரஷியாவை சேர்ந்த பெண்மணி ஐரினா பனேவா (வயது 60) என்பவர், ரஷிய அதிபர் புதினின் பெற்றோர் கல்லறையில் எழுதிய வாசகம் சர்ச்சை ஏற்படுத்தியது. அதில், உங்களுடன் உங்களது மகனையும் அழைத்து சென்று விடுங்கள் என குறிப்பு எழுதி வைத்து உள்ளார்.

போருக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர் இந்த கல்லறையை சேதப்படுத்தி உள்ளார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஐரினா கைது செய்யப்பட்டு உள்ளார்.

விளாடிமிர் புதினின் பெற்றோர் கல்லறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தபோதும், அதில் இருந்து தப்பி கல்லறையை அடைந்து உள்ளார். அந்த கல்லறையில், ஒரு கொலைகாரர் என்றும், அவரது மரணத்திற்காக ஒட்டுமொத்த உலகமும் பிரார்த்தனை செய்து வருகிறது என்றும் தெரிவித்து உள்ளார்.

கொலைகாரரின் பெற்றோரே, அவரை உங்களுடன் எடுத்து செல்லுங்கள். அவரால் எங்களுக்கு நிறைய வலி ஏற்பட்டு விட்டது என குறிப்பிட்டு உள்ளார். இதனை அறிந்த கல்லறையின் பாதுகாவலர் உடனடியாக போலீசிடம் தகவல் தெரிவித்து உள்ளார்.

இதன்பின், சி.சி.டி.வி. கேமிரா அடிப்படையில் பனேவா கண்டறியப்பட்டார். அதன்பின்னர், அவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு, கல்லறையை அரசியல் ரீதியாக அல்லது பகைமைக்காக சேதப்படுத்தியதற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க கூடும் என கூறப்படுகிறது.

விளாடிமிர் புதினின் பெற்றோரான ஸ்பிரிடனோவிச் புதின் மற்றும் மரியா இவாநோவ்னா புதினா ஆகியோர் ரஷிய அதிபராக புதின் பதவியேற்கும் முன்னரே உயிரிழந்து விட்டனர்.

பனேவாவுக்கு வருகிற நவம்பர் 8-ந்தேதி வரை வீட்டு காவல் விதிக்கப்படுகிறது என நீதிபதி தண்டனை அறிவித்து உள்ளார். இணையதளம், தொலைபேசி அல்லது மெயில் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்