சீனாவின் மனித உரிமை மீறல் குற்றங்களை பட்டியலிட்டு ஐ.நா அறிக்கை வெளியீடு!
|உய்குர் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக, சீனா கடுமையான மனித உரிமை மீறல்களை செய்துள்ளது என்பதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ளது.
ஜெனீவா [சுவிட்சர்லாந்து],
மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் அலுவலகம் (ஓ.ஹச்.சி.ஹச்.ஆர்), சீனாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஜின்ஜியாங் பகுதியில் அரங்கேறிய கொடுமைகள் பற்றிய அறிக்கை ஒன்றை புதன்கிழமை வெளியிட்டது.
ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில், உய்குர்கள் மற்றும் பிற பெரும்பான்மையான முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், 2017 இன் பிற்பகுதியில் இருந்து ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
குறிப்பாக பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சீன அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளின் பின்னணியில், பல கொடுமைகள் நடந்துள்ளன.
உய்குர் மற்றும் இதர பெரும்பான்மையான முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக, சீனா கடுமையான மனித உரிமை மீறல்களை செய்துள்ளது என்பதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் மிச்செல் பச்செலெட் கடந்த மே மாதம் சீனா சென்று ஆய்வு செய்தார். அதன்பின் அவர் கூறுகையில், கொடுமையான சித்திரவதை, தடுப்புக்காவலில் அடைத்து தவறாக நடத்துதல் மற்றும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் போன்ற பல குற்றச்சாட்டுகள் நம்பகமானவையாக உள்ளன என்றார்.
இந்நிலையில், ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் மிச்செல் பச்செலெட் பணி காலம் முடிவுறும் நிலையில் சீனாவை பகிரங்கமாக குற்றம்சாட்டி இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சீன அரசாங்கத்தின் வலியுறுத்தலின் பின்னணியில் இந்த உரிமை மீறல்கள் நடந்துள்ளன. சீன அரசு, உய்குர் சிறுபான்மையினரிடையே உள்ள பயங்கரவாதிகளை தீவிரவாத எதிர்ப்பு மூலோபாயத்துடன் குறிவைக்கிறது.
உய்குர் இன மக்களுக்கு எதிரான தன்னிச்சையான தடுப்புக்காவல், அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட சூழல் போன்ற செயல்கள் மனிதகுலத்திற்கு எதிரான சர்வதேச குற்றங்கள் ஆகும்.
சர்வதேச சட்டங்கள் மற்றும் தரங்களை மீறும் வகையில், 'மத சுதந்திரம், தனியுரிமை மற்றும் இயக்கத்திற்கான உரிமைகள்' உட்பட பல்வேறு மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் மீதான பாரபட்சமான கட்டுப்பாடுகள் இதில் அடங்கும்.
தற்போது ஐ.நா. அலுவலகத்தில் கிடைக்கப்பெறும் நம்பகத்தன்மை வாய்ந்த ஆவணங்களை தீவிர மதிப்பாய்சு செய்து அதன் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து நபர்களையும் விடுவிக்க உடனடியான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐநா உரிமைகள் அலுவலகம் சீனாவுக்கு பரிந்துரை செய்துள்ளது.
சித்திரவதை, பாலியல் வன்முறை, தவறான சிகிச்சை, கட்டாய மருத்துவ சிகிச்சை, அத்துடன் கட்டாய உழைப்பு மற்றும் காவல் மரணங்கள் பற்றிய அறிக்கைகள் உட்பட முகாம்களில் அரங்கேறிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு உடனடி விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சீன அரசாங்கம் ஐ.நா.வின் விரிவான அறிக்கையை மறுத்துள்ளது.
சீனா தரப்பில் தெரிவிகப்பட்டுள்ளதாவது:-
ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையில் செயல்படுகின்றனர்.
சீனாவின் கொள்கை 'பாகுபாட்டின் அடிப்படையிலானது' என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சீனாவின் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை சட்டத்தின் படி மட்டுமே நடத்தப்பட்டது.
ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சீனாவின் பயங்கரவாத எதிர்ப்பு, எந்த வகையிலும் "இன சிறுபான்மையினரை ஒடுக்குவது" என்று கருத முடியாது.
இவ்வாறு சீன அரசு தெரிவித்துள்ளது.