< Back
உலக செய்திகள்
எம்.பி. ஆன பிறகும் திருந்தாத ஷகிப் அல் ஹசன்: ரசிகருக்கு கன்னத்தில் பளார்!

image courtesy; AFP

உலக செய்திகள்

எம்.பி. ஆன பிறகும் திருந்தாத ஷகிப் அல் ஹசன்: ரசிகருக்கு கன்னத்தில் பளார்!

தினத்தந்தி
|
8 Jan 2024 2:37 PM IST

ஷகிப் அல் ஹசன் வங்காளதேச நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஷகிப் அல் ஹசன், தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். அவர் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றுள்ளார். பிரதான எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்த நிலையில், மகுரா வடக்கு தொகுதியில் போட்டியிட்ட ஷகிப் அல் ஹசன் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றார்.

இந்த நிலையில் தேர்தலில் வெற்றிபெற்ற ஷகிப் அல் ஹசனை சுற்றிவளைத்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை கூறி வந்தனர். அப்போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் அதிகமானது. அதில் ஷகிப் அல் ஹசனிடம் ரசிகர்கள் எல்லை மீற, திடீரென ஒருவருக்கு கன்னத்தில் பளாரென அறை கொடுத்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், ஷகிப் அல் ஹசனை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே வங்கதேச உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஷகிப் அல் ஹசன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ-விற்கு அவுட் கொடுக்காதபோது அம்பயரை தரக்குறைவாக விமர்சித்ததோடு, ஸ்டம்புகளையும் கால்களால் உதைத்து தள்ளினார். தொடர்ந்து இதேபோல் மற்றொரு முறை நடக்க ஸ்டம்புகளை தூக்கி எறிந்தார். இதனால் ஷகிப் அல் ஹசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்பின் ரசிகர் ஒருவரை பேட்டை வைத்து மிரட்டியது என்று அவரின் கோபம் எல்லை மீறி கொண்டே இருந்தது. தற்போது எம்.பி.-யாக வெற்றிபெற்றும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் ரசிகரை அடித்துள்ள சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியில் விமர்சனங்களை அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்