< Back
உலக செய்திகள்
மொராக்கோ:  நிலநடுக்க அதிர்வால் திருமண இசை கச்சேரியை ரசித்தவர்கள் அலறியடித்து ஓட்டம்
உலக செய்திகள்

மொராக்கோ: நிலநடுக்க அதிர்வால் திருமண இசை கச்சேரியை ரசித்தவர்கள் அலறியடித்து ஓட்டம்

தினத்தந்தி
|
11 Sept 2023 2:48 PM IST

மொராக்கோவில் நிலநடுக்க அதிர்வால் திருமண நிகழ்ச்சியில் இசை கச்சேரியை ரசித்து கேட்டு கொண்டிருந்தவர்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

மரக்கே,

மொராக்கோ நாட்டில் மரக்கேஷ் என்ற சுற்றுலா மையபகுதிக்கு தென்மேற்கே 72 கி.மீ. தொலைவில் கடந்த வெள்ளி கிழமை இரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.8 ஆக பதிவான நிலநடுக்க பாதிப்புகளில் சிக்கி மக்கள் பலர் உயிரிழந்தனர்.

இந்த பலி எண்ணிக்கை 2,012 ஆக உயர்ந்து உள்ளது. 2,059 பேர் காயமடைந்தனர். அவர்களில் 1,404 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலநடுக்கத்தில் அட்லஸ் மலை பகுதியில் அமைந்த ஒட்டுமொத்த கிராமங்களும் அழிந்து விட்டன.

நிலநடுக்க இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்க கூடும் என கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. இந்நிலையில், மரக்கேஷ் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின்போது திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர்கள் அலறியடித்து ஓடும் வீடியோ வெளிவந்துள்ளது.

திருமண நிகழ்ச்சியில் விருந்தினர்கள் ரசிப்பதற்காக இசை கச்சேரி ஒன்று நடத்தப்பட்டு உள்ளது. அதில், பாடகர் மைக்கில் பாடல்களை பாடி கொண்டிருக்கும்போது, திடீரென திரும்பி பார்க்கிறார்.

அப்போது, நிலநடுக்க அதிர்வு ஏற்பட்டு உள்ளது. அதனை உணர்ந்த இசை குழுவினர், விருந்தினர்கள் என பலரும் அந்த பகுதியில் இருந்து அலறியடித்து கொண்டு வெளியே ஓடினார்கள். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்