< Back
உலக செய்திகள்
மொராக்கோவை உலுக்கிய நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதால் அதிர்ச்சி..!!

Image Courtacy: AFP

உலக செய்திகள்

மொராக்கோவை உலுக்கிய நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதால் அதிர்ச்சி..!!

தினத்தந்தி
|
10 Sept 2023 5:44 AM IST

மொராக்கோ நாட்டை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ரபாட்,

வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குட்டி நாடு மொராக்கோ. இங்கு உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 23:11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3:40) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவு கோலில் 7.0 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

அதை தொடர்ந்து, 19 நிமிடங்களுக்கு பிறகு 4.9 புள்ளிகள் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் சுற்றுலா நகரமான மராகேஷ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டம ஆகின.

மீட்புகுழுவினர் விரைந்தனர்

இந்த நிலநடுக்கத்தால் அதிர்வினை உணர்ந்தவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். எனினும் இரவு நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் தூங்கி கொண்டிருந்தவர்கள் உடனடியாக வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர். இதனையடுத்து மீட்பு குழுவினர் அங்கு விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளில் குவியல் குவியலாக பிணங்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில் மொராக்கோ நாட்டை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அண்டை நாடுகளிலும் தாக்கம்

இந்த கோர சம்பவத்தில் பலியானவர்களுக்கு இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள மதீனா என்ற சிவப்பு சுவர்களும் இந்த நிலநடுக்கத்தால் சேதம் அடைந்தது. இதுகுறித்த காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அல்ஜீரியா, போர்ச்சுகல் போன்ற அண்டை நாடுகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அங்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்