பர்கினோ பசோ: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புபடையினர் 50 பேர் பலி
|பர்கினோ பசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புபடையினர் 50 பேர் உயிரிழந்தனர்.
ஒவ்கடங்கு,
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதேவேளை அந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினருக்கு உதவியாக அரசு ஆதரவு குழுக்களும் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் யடாங்கா மாகாணம் ஹும்ரி பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 53 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 36 பேர் பாதுகாப்புப்படையில் பணியாற்றும் அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலையடுத்து பயங்கரவாத தாக்குதல் நடந்த பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.