< Back
உலக செய்திகள்
200-க்கும் மேற்பட்ட ரோகிங்கியா அகதிகள் டிரோன் தாக்குதலில் பலி
உலக செய்திகள்

200-க்கும் மேற்பட்ட ரோகிங்கியா அகதிகள் டிரோன் தாக்குதலில் பலி

தினத்தந்தி
|
11 Aug 2024 3:58 AM IST

டிரோன் தாக்குதலில் ரோகிங்கியா அகதியான எலியாசின் கர்ப்பிணி மனைவியும், 2 வயது மகளும் காயமடைந்து பின்னர் உயிரிழந்து விட்டனர்.

நைபிடா,

மியான்மர் நாட்டில் இருந்து ரோகிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக வங்காளதேச நாட்டுக்கு தப்பி செல்கின்றனர். 2017-ம் ஆண்டில் இருந்து இதுவரை 7.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக தப்பி செனறுள்ளனர். இந்நிலையில், எல்லை பகுதியில் தப்பி செல்வதற்காக முயன்ற அகதிகளில் பலர் டிரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் உயிரிழந்து உள்ளனர்.

கிளர்ச்சியாளர்களுக்கும், மியான்மர் ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலில் அகதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. எனினும், இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு கூறுகின்றனர்.

இந்த தாக்குதல் பற்றிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அதில், அகதிகளின் உடைமைகள் தரையில் அங்கொன்றும், இங்கொன்றும் என பரவி கிடக்கின்றன. அதன் அருகே அவர்களின் உடல்கள் குவியலாக கிடக்கின்றன.

இதில் உயிர் தப்பிய 3 பேர் கூறும்போது, 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளனர். எனினும், இந்த வீடியோ எடுக்கப்பட்ட சரியான தேதி உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதில் தப்பி வந்த முகமது எலியாஸ் (வயது 35) குடும்பத்தினருடன், கடற்கரையோரம் நின்றிருந்தபோது நடந்த தாக்குதலில் அவருடைய கர்ப்பிணியான மனைவியும், 2 வயது மகளும் படுகாயமடைந்தனர். எனினும், பின்னர் அவர்கள் உயிரிழந்து விட்டனர் என கூறியுள்ளார்.

இந்த தாக்குதலின்போது, அவர் தரையில் படுத்து உயிர் தப்பி விட்டார். ஆனால், மனைவியும், மகளும் அவரின் கண்ணெதிரே காயமடைந்து உயிரிழந்து விட்டனர். இதுபோன்று பல்வேறு நபர்களும் தாக்குதலில் உயிரிழந்து உள்ளனர்.

மியான்மரில் இருந்து முஸ்லிம் சிறுபான்மையினரான ரோகிங்கியாக்கள் படகுகளில் தப்பி சென்றபோது, நப் ஆற்றில் படகுகள் கவிழ்ந்தும் பலர் உயிரிழந்து உள்ளனர். இதனை வங்காளதேச ஊடகங்களும் தெரிவித்து உள்ளன.

மேலும் செய்திகள்