இஸ்ரேல் - ஹமாஸ் போர்: காசாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி - அதிர்ச்சி தகவல்
|இஸ்ரேல் - ஹமாஸ் போரில் 3,320 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசாமுனை,
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதற்கிடையே, போரில் அப்பாவி பொதுமக்கள், குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்படுவதால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா.வும். உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போர் நிறுத்த அழைப்பை இரு தரப்பும் நிராகரித்து வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் போரில் காசாவில் இதுவரை 8 ஆயிரத்து 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 ஆயிரத்து 320 குழந்தைகள் ஆவர். 20,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.