< Back
உலக செய்திகள்
பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என கடவுளுக்கே பாடம் எடுப்பார், மோடி - ராகுல் கிண்டல்
உலக செய்திகள்

'பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என கடவுளுக்கே பாடம் எடுப்பார், மோடி' - ராகுல் கிண்டல்

தினத்தந்தி
|
1 Jun 2023 5:22 AM IST

இந்தப் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பது பற்றி மோடி, கடவுளுக்கே பாடம் எடுப்பார் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

சான்பிரான்சிஸ்கோ,

சாண்டா கிளாராவில் இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸ் (காங்கிரசின் வெளிநாட்டு பிரிவு) சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ராகுல் கலந்து கொண்டு இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியை கிண்டல் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எந்த ஒரு மனிதரும், எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு இந்த உலகம் மிகப்பெரியது, சிக்கலானது. ஆனால், இந்தியாவில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற நினைக்கிற ஒரு குழுவினர் இருக்கிறார்கள். அவர்கள், கடவுளைவிடவும் தங்களுக்கு அதிகமாகத்தெரியும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் கடவுளுடன் அமர்ந்து கொண்டு, உலகில் என்ன நடக்கிறது என்று விளக்குவார்கள். இதற்கு எங்கள் பிரதமர் சரியான உதாரணம்.

நீங்கள் பிரதமர் மோடியை கடவுளுடன் உட்கார வைத்தால், இந்தப் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பது பற்றி அவர் கடவுளுக்கே பாடம் எடுப்பார். அப்போது, கடவுள் தான் படைத்தது என்ன என்பதில் குழம்பிப்போவார்.

அவர்கள் தங்களால் வரலாற்று ஆசிரியர்களுக்கு வரலாறையும், விஞ்ஞானிகளுக்கு அறிவியலையும், ராணுவத்துக்கு போர்முறையையும் விளக்க முடியும் என்று நினைக்கிறார்கள். அதன் மையப்பொருள், சாதாரணமானது. அவர்கள் எதையும் காது கொடுத்துக் கேட்பதற்கு தயாராக இல்லை என்பதுதான் அது. இவ்வாறு அவர் கூறினார்.

இது அங்கிருந்தவர்கள் மத்தியில் பலத்த சிரிப்பை வரவழைத்தது.

மேலும் செய்திகள்