உகாண்டாவில் மந்திரி சுட்டுக்கொலை: பாதுகாவலர் வெறிச்செயல்
|உகாண்டாவில் நீண்ட நாட்களாக சம்பளம் தராததால் ஆத்திரம் அடைந்த பாதுகாவலர் மந்திரியை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கம்பாலா,
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தற்போது அதிபர் யோவேரி முசவேனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது மந்திரி சபையில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான சார்லஸ் எங்கோலா தொழிலாளர் துறை மந்திரியாக பொறுப்பு வகித்து வந்தார்.
உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவின் புறநகர் பகுதியில் இவரது வீடு உள்ளது. இங்கு நேற்று காலை மந்திரி எங்கோலாவுக்கும், அவரது பாதுகாவலர் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டார்.
துப்பாக்கியால் சுட்டார்
இந்த துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும், அங்கிருந்த மற்ற போலீசார் வீட்டுக்குள் விரைந்து சென்றனர். இதில் மந்திரி சார்லஸ் எங்கோலா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே மந்திரியை சுட்டுக்கொன்ற அந்த பாதுகாவலரும் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாக அந்த நாட்டின் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலியே பயிரை மேய்ந்தது போல...
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் ஆத்திரம் அடைந்த அந்த பாதுகாவலர் மந்திரியிடம் இது குறித்து கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அவரை சுட்டு கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும் `வேலியே பயிரை மேய்ந்தது போல' பாதுகாப்பு அளிக்க வேண்டிய பாதுகாவலரே மந்திரியை சுட்டு கொன்ற விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளாகி உள்ளது.
தலைவர்கள் இரங்கல்
மந்திரி சார்லஸ் எங்கோலாவின் மறைவுக்கு அந்த நாட்டின் அதிபர் யோவேரி முசவேனி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.