இலங்கை அதிபர் மாளிகைக்குள் கட்டுக்கட்டாக கிடைத்த பணம் 3 வாரங்களுக்கு பின் கோர்ட்டில் ஒப்படைப்பு!
|அதிபர் மாளிகைக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த பல லட்சம் பணத்தை கண்டறிந்து போலீசிடம் இந்த தகவலை தெரியப்படுத்தினர்.
கொழும்பு,
இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அங்கு மறைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான தொகையை கண்டு பிடித்தனர். இந்த நிலையில் அந்த பணம் முழுவதும் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜூலை 9 அன்று பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். கொழும்பு நகரில் அமைந்துள்ள அதிபர் மாளிகைக்குள் நுழைந்த அவர்கள், அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். ஆனால் இதற்கு முன்பாகவே, அதிபராக இருந்த ராஜபக்சே இலங்கையை விட்டு தப்பி ஓடிவிட்டார். தற்போது அவர் சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் அவர் தங்கியிருந்த தனி வீட்டினுள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூபாய் 17.85 மில்லியன் பணத்தை கண்டறிந்து போலீசிடம் இந்த தகவலை தெரியப்படுத்தினர். இந்த பணம் நேற்று அங்குள்ள கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி, கடந்த மூன்று வார காலமாக போலீஸ் தரப்பில் இருந்த இந்த பணம், கோர்ட்டில் ஒப்படைக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டது ஏன்? என்ற சந்தேகம் எழுகிறது என்று தெரிவித்தார். மேலும் காலம் தாழ்த்தப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் போலீஸ் ஐ.ஜி சிறப்பு புலனாய்வு குழுக்கான இயக்குனரை நியமித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தப்பியோடிய இலங்கை அதிபரின் மாளிகைக்குள் அவர் தங்கியிருந்த தனி வீட்டினுள், கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.