ஆஸ்திரேலியாவில் ராணுவ பயிற்சியில் விபத்து: அமெரிக்க கடற்படை வீரர்கள் 3 பேர் பலி; 20 பேர் காயம்
|ஆஸ்திரேலியாவில் ராணுவ பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் அமெரிக்க கடற்படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
டார்வின்,
ஆஸ்திரேலியாவின் மெல்வில்லே தீவில் டார்வின் என்ற பகுதியில் இருந்து திவி என்ற தீவு பகுதியை நோக்கி அமெரிக்க கடற்படையை சேர்ந்த 2 ஆஸ்பிரே விமானங்கள் புறப்பட்டன.
அதில் 23 கடற்படை வீரர்கள் இருந்தனர். அவர்கள் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, இன்று காலை 9.30 மணியளவில் திடீரென அவர்களின் விமானத்தில் ஒன்று விபத்திற்குள்ளானது.
எம்.வி.-22பி ஆஸ்பிரே ரக விமானத்தில் பயணம் செய்த வீரர்கள் இந்த விபத்தில் சிக்கினர். இதில், அமெரிக்க கடற்படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ராயல் டார்வின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்றன. விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை தொடங்கியுள்ளது. இதனை ஒரு வருந்தத்தக்க சம்பவம் என பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறியுள்ளார்.
ஆஸ்பிரே ரக விமானங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. கடந்த 2022-ம் ஆண்டில் கலிபோர்னியாவில் பயிற்சியில் விமானம் விபத்தில் சிக்கியதில் அமெரிக்க கடற்படை வீரர்கள் 5 பேர் மரணம் அடைந்தனர்.
அதே ஆண்டில் நார்வே நாட்டில் நடந்த நேட்டோ பயிற்சியில் ஏற்பட்ட விபத்தில் அமெரிக்காவின் 4 சேவை பணியாளர்கள் உயிரிழந்தனர். 2017-ம் ஆண்டில் 2 ஆஸ்பிரே ராணுவ விமானங்கள் விபத்தில் சிக்கின.