< Back
உலக செய்திகள்
அண்டார்டிகா பனியில் பிளாஸ்டிக் துகள்கள்: நியூசிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
உலக செய்திகள்

அண்டார்டிகா பனியில் பிளாஸ்டிக் துகள்கள்: நியூசிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

தினத்தந்தி
|
10 Jun 2022 2:33 AM IST

அண்டார்டிகா பனியில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை நியூசிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வெலிங்டன்,

அண்டார்டிகா பனியில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை முதன்முதலாக நியூசிலாந்து நாட்டின் காண்டர்பரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அதிர வைத்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் அண்டார்டிகாவில் 19 இடங்களில் பனி மாதிரிகளை சேகரித்து ஆராய்ச்சி நடத்தி உள்ளனர்.

அவை ஒவ்வொன்றிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த பிளாஸ்டிக் துகள்கள் அரிப்பில் இருந்து உருவானது என்றும், அரிசியை விட சிறியது என்றும், வெறும் கண்களால் பார்த்தால் தெரியாது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஒரு லிட்டர் உருகிய பனியில் சராசரியாக 29 துகள்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் 13 வகையான பிளாஸ்டிக்குகளை அடையாளம் கண்டுள்ளனர். அவை பொதுவான பாலிஎதிலீன் டெரெப்தாலேட் ஆகும். இந்த பிளாஸ்டிக்தான் குளிர்பான பாட்டில்கள் மற்றும் ஆடைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது 79 சதவீத மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பிளாஸ்டிக் துகள்கள் எங்கிருந்து அண்டார்டிகாவுக்கு வந்தது என்ற கேள்வி எழும். இது வான்வழியே காற்றில் வந்தவை என்றும், அவை 6 ஆயிரம் கி.மீ. தொலைவில் உருவானவையாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் அண்டார்டிக் கடல் பனி மற்றும் மேற்பரப்பு நீரில் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இப்போதுதான் புதிய பனியில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் கண்டறியப்பட்டுள்ன என்பது குறிப்பிடத்தக்கது. 2020-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் அருகே ஆராய்ச்சியாளர்கள் நுண்ணிய பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்