மெக்சிகோ அதிபருக்கு 3-வது முறையாக கொரோனா தொற்று
|மெக்சிகோ நாட்டின் அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அவர் யுகடன் தீபகற்பத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த நிலையில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக தலைநகர் மெக்சிகோ சிட்டிக்கு திரும்பியுள்ளார்.
இது குறித்து அதிபர் ஆண்ட்ரெஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது தீவிரமாக இல்லை. நான் 100 சதவீதம் நலமாக உள்ளேன். இருப்பினும் சில நாட்களுக்கு நான் மெக்சிகோ சிட்டியில் தனிமைப்படுத்தப்படுவேன்" என குறிப்பிட்டுள்ளார்.
ஆண்ட்ரெஸ் முதல் முறையாக கடந்த 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானார். தீவிர சிகிச்சைக்கு பின் அதில் இருந்து அவர் மீண்டார். அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் அவருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், தற்போது 3-வது முறையாக அவரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.