மெக்சிகோவில் தேவாலய மேற்கூரை இடிந்து 10 பேர் பலி: 60-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்
|மெக்சிகோவில் தேவாலய மேற்கூரை இடிந்து விழுந்து 10 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது
மெக்சிகோ சிட்டி,
வடக்கு மெக்சிகோவின் சியுடாட் மடெரோ பகுதியில் சாண்டா குரூஸ் தேவாலயம் உள்ளது. இங்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. எனவே 100-க்கும் மேற்பட்டவர்கள் அதில் கலந்து கொண்டனர்.
அப்போது திடீரென அந்த தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனையடுத்து அலறியடித்துக்கொண்டு மக்கள் வெளியேற முயற்சித்தனர். எனினும் மக்கள் கூட்டத்தின் நடுவே விழுந்ததால் பலர் இதில் சிக்கி கொண்டனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
10 பேர் பலி
இதற்கிடையே இதுகுறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் ராட்சத கிரேன்களை கொண்டு இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர்.
எனினும் இந்த விபத்தில் 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 5 மாத குழந்தை உள்பட 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.
பலி எண்ணிக்கை உயரும்
இதனையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியாக இருந்தாலும் சம்பவம் நடந்தபோது அப்படி எதுவும் பதிவாகவில்லை. எனவே கட்டிடத்தில் காணப்பட்ட குறைபாடே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே தேவாலய மேற்கூரை இடிந்து கிடக்கும் காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.