மெக்சிகோ: போலீசார், ஆயுத கும்பல் மோதலில் 12 பேர் உயிரிழப்பு
|மெக்சிகோ நாட்டில் போலீசாருக்கும், ஆயுத கும்பலுக்கும் இடையேயான மோதலில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோ நாட்டில் போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது வழக்கம். இதில், கும்பல்கள் ஒருவரையொருவர் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் சுட்டு தாக்குதல் நடத்தி கொள்வார்கள்.
இதில், பொதுமக்கள் மற்றும் அரசு தரப்பு உயரதிகாரிகள் கூட உயிரிழந்த சம்பவங்கள் உள்ளன. இதுதவிர, ஆயுத கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் கும்பல்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் மேற்கே ஜாலிஸ்கோ மாகாணத்தில் தொடர்ச்சியான படுகொலைகள் நடந்த நிலையில், அதனை கண்காணிப்பதற்காக மெக்சிகோ நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் ராணுவ வீரர்கள் கொண்ட ஒரு குழுவை கடந்த மார்ச்சில் அமைத்தது.
மெக்சிகோவின் கூட்டு அதிரடி படை திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் குற்ற செயல்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜாலிஸ்கோவில் உள்ள எல் சால்டோ நகரில் வீடு ஒன்றில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்படி, எல் சால்டோ நகர போலீசார் மற்றும் மாகாண போலீசார் இணைந்து அதற்கு எதிரான அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதில், 8 குற்றவாளிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 3 பேர் தீவிர காயமடைந்தனர்.
இதனை உறுதி செய்துள்ள மாகாண கவர்னர் என்ரிக் ஆல்பேரோ, இந்த மோதலில், எல் சால்டோ நகர போலீஸ் அதிகாரிகள் 4 பேர் பணியின்போது உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
அந்நாட்டில் கடந்த 2010ம் ஆண்டில் சினாலோவா என்ற போதை பொருள் கடத்தல் கும்பலில் இருந்து ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன் என்ற புதிய போதை பொருள் கடத்தல் கும்பல் உருவானது. இது மெக்சிகோ சிட்டி உள்பட, 7 மாகாணங்களில் கிளை பரப்பி செயல்பட்டு வருகின்றன.