எகிப்து அதிபருடன் சந்திப்பு; நாட்டின் உயரிய ஆர்டர் ஆப் தி நைல் விருது வழங்கி பிரதமர் மோடிக்கு கவுரவம்
|பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய ஆர்டர் ஆப் தி நைல் விருது வழங்கி அந்நாட்டு அதிபர் சிசி கவுரவித்து உள்ளார்.
கெய்ரோ,
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் நிறைவை அடுத்து, எகிப்து நாட்டுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். அவர் எகிப்தில் 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக, கெய்ரோ விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை எகிப்து பிரதமர் முஸ்தபா மத்தவுலி நேரில் சென்று வரவேற்றார்.
பிரதமர் மோடி எகிப்து நாட்டிற்கு சென்றடைந்ததும் தலைநகர் கெய்ரோ நகரில் உள்ள ஓட்டலில் அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வந்தே மாதரம் என்றும், மோடி மோடி என்றும் கோஷங்களை எழுப்பினர்.
இந்திய சமூக மக்கள் பலரும் பிரதமர் மோடியை வரவேற்க திரண்டிருந்தனர். அதில், சிறுவர், சிறுமிகளும் இருந்தனர். பலர் இந்திய திரைப்பட பாடல்களை பாடியும், கலாசார நிகழ்ச்சிகளை வழங்கியும் அவரை வரவேற்றனர். அவர்களை பிரதமர் மோடி வாழ்த்தியதுடன், அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார்.
இந்த பயணத்தில் பிரதமர் மோடி மற்றும் எகிப்து பிரதமர் முஸ்தபா மத்தவுலி இடையே முதன்முறையாக வட்டமேசை மாநாடு ஒன்றும் நடைபெற்றது.
அவர் இந்த பயணத்தின்போது, கெய்ரோ நகரில் உள்ள அல்-ஹகீம் மசூதியில் இன்று அரை மணிநேரம் செலவிடுகிறார் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, அவர் மசூதியை இன்று பார்வையிட்டார். 11-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த மசூதியானது தாவூதி போரா சமூகத்தினரின் முக்கியத்துவம் வாய்ந்த கலாசார மையம் ஆகும். பிரதமர் மோடியின் வருகையையொட்டி இந்த மசூதி, மீட்டெடுக்கப்பட்டு உள்ளதும் முக்கியம் பெறுகிறது.
பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த அல்-ஹகீம் மசூதியானது, இந்திய மற்றும் எகிப்திய கலாசாரங்கள் ஒன்றிணைந்து இருப்பதனை வெளிப்படுத்துவதுடன், மத மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்கான ஒரு கலங்கரை விளக்கம் ஆகவும் சேவையாற்றி வருகிறது.
இதன்பின்னர், பிரதமர் மோடி எகிப்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து உரையாட இருக்கிறார். இரு தரப்பு மக்களின் உறவுகளை வளர்ப்பது மட்டுமின்றி, இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாசார பரிமாற்றத்திற்கு பங்காற்றுவதற்கு ஏற்ப, இந்திய வம்சாவளியினருக்கு ஒரு தளத்தினையும் அவரது இந்த சந்திப்பு வழங்கும்.
இதன்பின்னர், முதலாம் உலக போரில் எகிப்துக்காக போரிட்டு, உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்காக அமைக்கப்பட்ட ஹீலியோபோலிஸ் போர் கல்லறைக்கு நேரில் சென்ற பிரதமர் மோடி, வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதன்பின்னர் எகிப்து அதிபர் சிசியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இந்திய குழுவினரை சிசிக்கு, பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து இந்தியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. இதன்பின், பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய விருது என கூறப்படும், ஆர்டர் ஆப் தி நைல் விருது வழங்கி அந்நாட்டு அதிபர் சிசி கவுரவித்து உள்ளார்.