சூடான உணவை பரிமாறாததால் ஆத்திரம்! நியூயார்க்கில் மெக்டொனால்ட்ஸ் உணவக ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு!
|உணவு சூடாக பரிமாறப்படவில்லை என்பது தொடர்பான தகராறில் மெக்டொனால்டு கடை ஊழியர் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் மெக்டொனால்ட்ஸ் நிறுவன உணவகத்தில் வெப் என்ற 23 வயதான இளைஞர் கெவின் ஹோலோமேன் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் மைக்கேல் மோர்கன் (20) என்பவரால் அவர் சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, மோர்கன் தனது தாயார் லிசா புல்மோரை அழைத்துக்கொண்டு மெக்டொனால்ட்ஸ்க்கு சென்றுள்ளார்.
முன்னதாக, அவரது தாயார் புல்மோர் வாங்கிச் சென்ற பொரியல்(பிரைஸ்) சூடாக இல்லை எனவும், குளிர்ந்த நிலையில் இருந்த உணவை தனக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனை குறித்து புகார் எழுப்ப, அவர் தன் மகன் மோர்கன் மற்றும் அவரது தோழியுடன் கடைக்கு சென்றனர்.
அங்கு சென்ற அவர்கள், கடையில் உள்ள தொழிலாளர்களை தொந்தரவு செய்யத் தொடங்கினார். அவர்களை பார்த்து கேலி செய்து சிரித்த பணியாளர்கள், இதுகுறித்து மேலாளரிடம் பேசச் சொன்னதாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில், அவருக்கு உணவை வழங்கிய கெவின் ஹோலோமேன் உணவகத்திற்கு வெளியே சென்றார். அப்போது கடும் ஆத்திரத்தில் இருந்த மோர்கனால் கடைக்கு வெளியே சென்ற கெவின் ஹோலோமேன் சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, மோர்கன், மீது கொலை முயற்சி மற்றும் ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கமெலியா டன்லப் (18) என்ற மோர்கனின் காதலி மீதும் இரண்டு குற்றவியல் ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார், பின்னர் அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியை போலீசிடம் ஒப்படைத்தனர்.
மோர்கன் இதற்கு முன்பு பலமுறை குற்ற செயல்களில் ஈடுபட்ட்தற்காக கைது செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
பிரஞ்சு பிரைஸ் எனப்படும் உணவு சூடாக பரிமாறப்படவில்லை என்பது தொடர்பான தகராறில் மெக்டொனால்டு கடை ஊழியர் சுடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருவது அந்நாட்டு அரசுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.