ஆப்கானிஸ்தானில் சந்தையில் குண்டு வெடிப்பு; 2 பேர் பலி
|ஆப்கானிஸ்தானில் சந்தையில் குண்டு வெடிப்பில் 2 பேர் பலியாகினர்.
காபூல்,
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணம் நங்கர்ஹாரில் உள்ள கானி கைல் மாவட்டத்தில் பெரிய சந்தை ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த சந்தை வழக்கம்போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.
மக்களின் பாதுகாப்புக்காக தலீபான் அரசின் பாதுகாப்பு படையினர் சந்தையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தைக்குள் நுழைந்த அரசு அதிகாரி ஒருவரின் காரில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. கரும்புகை மண்டலம். குண்டு வெடிப்பில் சந்தையில் இருந்த ஏராளமான கடைகள் உருக்குலைந்துபோயின. குண்டு வெடிப்பில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
மேலும் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் உள்பட 28 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த குண்டு வெடிப்புக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.