அமெரிக்கா அதிபர் பைடன் கூறியதால் புளோரிடா விண்வெளி தளவாட மையத்தை சேதப்படுத்திய நபர் கைது! வினோத சம்பவம்!
|அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த ஒருவர், அப்பகுதியில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சி தளவாட மையத்தை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
புளோரிடா,
அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த 29 வயது நபர் ஒருவர், அப்பகுதியில் அமைந்துள்ள விண்வெளி ஆராய்ச்சி தளவாட மையத்தை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நீண்ட நாட்களாக திட்டமிட்டு இதை செய்துள்ளார். இதற்காக அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு காரை திருடி சென்றுள்ளார். பின் நேற்று அந்த காரை அதிவேகமாக ஓட்டி வந்து விண்வெளி தளவாட மையத்தின் வளாகத்தில் மோதி சேதப்படுத்தி உள்ளார்.
அவரை கைது செய்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.அமெரிக்கா அதிபர் பைடன் தன்னிடம் இச்செயலை செய்ய சொன்னதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
விண்வெளியில் உள்ள வேற்று கிரகவாசிகள் எனப்படும் ஏலியன்கள் மற்றும் சீனா டிராகன்கள் இடையே போர் வர போவதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது எனவும் இந்த செய்தியை விண்வெளி தளவாட மையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்க அதிபர் தனக்கு உத்தரவிட்டதாகவும் அதனால் தான் இச்செயலை செய்ததாகவும் கூறினார்.
அவர் மீது கார் திருட்டு உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. புளோரிடாவில் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் பேட்ரிக் விண்வெளி தளவாட மையம் அமைந்துள்ளது. அங்கு கிழக்கு பிராந்தியத்துக்கான ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்படும். இப்பகுதியில் ஒருவர் விபத்தை ஏற்படுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.