720 டிகிரி உருகிய அலுமினியத்தில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்
|உருகிய அலுமினிய குழம்பில் விழுந்த நபர் தானாகவே தன்னை விடுவித்துக் கொண்டு அதில் இருந்து வெளியேறியுள்ளார்.
பேர்ன்,
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள செயிண்ட் கெலன் பகுதியில் உருக்கு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. உருக்கு ஆலைகளில் இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களை உலைக்களத்தில் (Furnace) மிக அதிகமான வெப்பநிலையில் உருக்கி பின்னர் அவற்றை தகடுகளாகவும், கட்டிகளாகவும், கம்பிகளாகவும் மாற்றும் பணிகள் நடைபெறும்.
அந்த வகையில் சம்பவத்தன்று, இந்த ஆலையில் பணியாற்றி வரும் எலக்ட்ரீசியன் ஒருவர் உலைக்களத்தின் மீது ஏறி நின்றவாரு வேலை செய்து கொண்டிருந்தார். அந்த உலைக்களத்தில் அப்போது சுமார் 720 டிகிரி வெப்பநிலையில் அலுமினியத்தை உருக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இருப்பினும் உலைக்களம் முழுவதும் மூடிய நிலையிலேயே இருந்ததால், அதன் மீது ஏறி அவர் பணியாற்றியுள்ளார். அந்த சமயத்தில் 'டிராப் டோர்' எனப்படும் மூடி உடைந்து, எலக்ட்ரீசியனின் அதற்குள் விழுந்துள்ளார். இதில் அவரது கால்கள் முழுவதுமாக உருகிய அலுமினியத்தில் மூழ்கின.
அருகில் யாரும் இல்லாத நிலையில், அந்த நபர் தானாகவே அந்த உருகிய அலுமினிய குழம்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வெளியேறியுள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்த பணியாளர்கள் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அந்த நபரின் கால்களில் தீவிரமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் அவர் விரைவில் குணமடைவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக செயிண்ட் கெலன் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.