ரஷியாவில் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் திட்டத்தை எதிர்த்து அரசு அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் கைது!
|ரஷிய ராணுவத்துக்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
மாஸ்கோ,
உக்ரைனில் நடந்துவரும் போரில் ரஷிய ராணுவத்துக்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. தாய்நாட்டுக்காக பொதுமக்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிபர் விளாடிமிர் புதினின் அறிவிப்புக்கு எதிராக, ரஷியா முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
ரஷியாவில் இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள வரைவுத் தீர்மானம் தயாரிக்கும் அரசு அலுவலகம் ஒன்றில் இன்று ஒரு இளைஞர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில் அந்த அலுவலகத்தில் இருந்த ராணுவ அதிகாரி ஒருவர் பலத்த காயமடைந்தார்.
ரஷிய ராணுவத்துக்காக ஆள்சேர்க்கும் வரைவுத் தீர்மானம் தயாரிக்கும் பணி அங்கு நடைபெற்று வந்ததாகவும், அந்த குழுவின் தலைவராக இருந்த ராணுவ அதிகாரி ஒருவர் மீது குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.துப்பாக்கிச் சூடு நடத்திய போராட்டக்காரர் , "யாரும் எங்கும் செல்ல மாட்டோம்" என்று ஆவேசமாக பேசிக்கொண்டே அலுவலகத்தில் புகுந்து அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளார்.
படுகாயமடைந்த அந்த அதிகாரி உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார்.இதுமட்டுமன்றி ரஷியாவின் பிற பகுதிகளிலும் அரசின் அறிவிப்பை எதிர்த்து அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.