கடற்கரையில் இதுவரை கண்டிராத வினோத உயிரினம்... ஏலியன் என நினைத்து அச்சமடைந்த நபர்..!
|வித்தியாசமான உயிரினத்தை கண்ட அவர், இது ஒருவேளை வேற்றுக்கிரக உயிரினமாக இருக்கக்கூடும் என அஞ்சினார்.
எடின்பர்க்,
ஸ்காட்லாந்தில் எடின்பரோவில் உள்ள போர்டோபெல்லோ கடற்கரையில் மைக் அர்னாட் என்பவர் ஒரு வினோத உயிரினத்தை கண்டுள்ளார். இந்த உயிரினம் புவியில் உள்ள உயிரினத்தை காட்டிலும் வித்தியாசமாக உள்ளதாக உணர்ந்த அவர், இது ஒருவேளை வேற்றுக்கிரக உயிரினமாக இருக்கக்கூடும் என அஞ்சினார்.
அந்த உயிரினத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவர் கூறும்போது, நான் இதனை வித்தியாசமான முட்களுடன் பார்த்தேன். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. பிரகாசமான பச்சை மற்றும் தங்க நிறங்கள் என்னை நேராக ஈர்த்தது.
நான் அதைப் புரட்டினேன், அதில் நிறைய சிறிய கால்கள் இருப்பதைக் கண்டேன் - நான் அதைப் போன்ற எதையும் பார்த்ததில்லை. அது ஒரு வேற்றுகிரகவாசியாக இருக்கக்கூடும் என்று என் மனதுக்கு தோன்றியது. என்று அவர் கூறினார்.
இருப்பினும், ஸ்காட்டிஷ் வனவிலங்கு அறக்கட்டளையைச் சேர்ந்த பீட் ஹாஸ்கெல் அவரது கூற்றை நிராகரித்து, அந்த உயிரினத்தை ஒரு கடல் எலி அல்லது ஒரு வகை புழு என அடையாளம் காட்டினார்.
தண்ணீருக்கு வெளியே இருப்பது சற்று விசித்திரமாகத் தெரிகிறது, ஆனால் இது ஒரு வகையான கடல் முட்புழு. இது இங்கிலாந்து கடற்கரை முழுவதும் காணப்படுகிறது" என்று ஹாஸ்கெல் கூறினார்.
பளபளக்கும் பச்சை மற்றும் தங்க முட்கள் காரணமாக இது அசாதாரணமாகவும் மற்ற கடல் உயிரினங்களிலிருந்து வேறுபட்டதாகவும் கானப்படுகிறது. தனக்கு ஆபத்து வரும்போது எச்சரிக்க, அதன் முட்கள் பச்சை, நீலம் அல்லது சிவப்பு நிறத்தில் ஒளிரும். அவை 30 செமீ நீளம் வரை வளரக்கூடியவை மற்றும் சிறிய நண்டுகள், ஹெர்மிட் நண்டுகள் மற்றும் பிற புழுக்களை இது உண்கிறது.