இந்திய படைகளை வெளியேற்றிவிட்டு சீனாவிடம் இருந்து இலவசமாக ராணுவ உதவி பெறும் மாலத்தீவு
|மாலத்தீவில் உள்ள இந்திய வீரர்களில் முதல் குழுவினர் வரும் 10-ம் தேதிக்குள் வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மாலி,
இந்தியாவை வெளியேற்றுவோம் என்ற முழக்கத்துடன் மாலத்தீவு அதிபரான முய்சு, சீனாவுடன் நெருக்கம் காட்டுகிறார். சீனாவுடனான உறவை பலப்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். இதனால் இந்தியா-மாலத்தீவு இடையே உரசல் ஏற்பட்டுள்ளது.
மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களை இந்திய ராணுவம் நிர்வகித்து வந்தது. அங்கு இந்திய ராணுவ வீரர்கள் 88 பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அவர்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு டோர்னியர் விமானத்தைப் பயன்படுத்தி, கடந்த சில ஆண்டுகளாக மாலத்தீவு மக்களுக்கு மருத்துவ தேவைகளுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்கி வந்தனர்.
முய்சு பதவியேற்றபின் இந்திய படைகளை வெளியேற்ற முடிவு செய்தார். இதுதொடர்பாக இரு தரப்பிலும் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் பேசிய முய்சு, ஒரு விமான தளத்தில் இருந்து இந்திய வீரர்கள் 2024 மார்ச் 10-ம் தேதிக்குள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும், மீதமுள்ள இரண்டு விமான தளங்களில் இருக்கும் வீரர்கள் 2024 மே 10-ம் தேதிக்குள் அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.
இந்திய ராணுவத்தின் முதல் குழுவை வெளியேற்றுவதற்கான கெடு இன்னும் ஐந்து நாட்களில் முடிய உள்ள நிலையில், அந்த வீரர்களுக்கு பதிலாக பணியாற்றக்கூடிய இந்திய தொழில்நுட்ப குழு மாலத்தீவு வந்துள்ளது. அவர்கள் விமான தளத்தின் பொறுப்பை ஏற்றதும் அந்த தளத்தில் உள்ள இந்திய வீரர்கள் நாடு திரும்ப உள்ளனர்.
ஒருபுறம் இந்திய வீரர்களை வெளியேற்றுவதற்கு கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் சீனாவிடம் இருந்து இலவசமாக ராணுவ உதவிகளை பெறும் வகையில் நேற்று ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் ராணுவ உதவியை இலவசமாக வழங்குவது மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையிலான இந்த ஒப்பந்தத்தில், மாலத்தீவு பாதுகாப்புத்துறை மந்திரி முகமது காசன் மவுமூன், சீனாவின் சர்வதேச ராணுவ ஒத்துழைப்பு அலுவலக துணை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஜாங் பாவ்கன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளதாக மாலத்தீவு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத 12 ஆம்புலன்ஸ்களை மாலத்தீவுக்கு சீன அரசாங்கம் பரிசாக வழங்கியுள்ளதாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.