< Back
உலக செய்திகள்
அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புங்கள் - சீனாவுக்கு மாலத்தீவு அதிபர் வேண்டுகோள்
உலக செய்திகள்

அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புங்கள் - சீனாவுக்கு மாலத்தீவு அதிபர் வேண்டுகோள்

தினத்தந்தி
|
10 Jan 2024 11:01 AM IST

பிரதமர் மோடி விமர்சிக்கப்பட்டதையடுத்து இந்தியர்கள் பலரும் மாலத்தீவு சுற்றுலா பயணத்தை ரத்து செய்தனர்.

மாலே,

இந்தியா அருகே அமைந்துள்ள நாடு மாலத்தீவு. இந்நாட்டின் அதிபராக முகமது முய்சு செயல்பட்டு வருகிறார். இதனிடையே, முகமது முய்சு தலைமையிலான அரசில் இடம்பெற்றிருந்த மந்திரிகள் சிலர் இந்திய பிரதமர் மோடி, இந்தியர்கள் மீது சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தனர். லட்சத்தீவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை ஊக்குவிக்கும் விதமாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவுக்கு மாலத்தீவு அரசில் இடம்பெற்றிருந்த மந்திரிகள் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் இந்த விவகாரம் பூதாகரமானது.

இதனால், ஆத்திரமடைந்த இந்தியர்கள் பலர் மாலத்தீவுக்கு முன்பதிவு செய்த சுற்றுலா பயணத்தை ரத்து செய்தனர். மேலும், லட்சத்தீவில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வகையில் பலரும் அந்த தீவுக்கு பயணிக்க தொடங்கினர். மாலத்தீவு செல்ல செய்திருந்த ஓட்டல் முன்பதிவுகள், விமான டிக்கெட்டுகளை இந்தியர்கள் பலரும் ரத்து செய்தனர். இந்தியர்களின் இந்த நடவடிக்கையால் சுற்றுலா துறையை பெரும்பாலும் நம்பியுள்ள மாலத்தீவு பொருளாதார சிக்கலை சந்திக்கலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். 5 நாள் பயணமாக சீனா சென்றுள்ள அதிபர் முகமது முய்சு அந்நாட்டின் பிஜின் மாகாணத்தில் நடைபெற்ற மாலத்தீவு வர்த்தக மன்றம் மாநாட்டில் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் முகமது முய்சு கூறியதாவது, சீனா எங்களின் மிகவும் நெருங்கிய கூட்டாளிகளில் ஒன்று. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் எங்கள் சுற்றுலா துறையின் முதன்மை சந்தையாக சீனா உள்ளது. மாலத்தீவுக்கு சுற்றுலா வரும் பயணிகளில் முதல் இடத்தில் சீனா உள்ளது. இதே நிலை தொடர சீனா எங்கள் நாட்டிற்கு மேலும் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்ப வேண்டும்' என்றார்.

மேலும் செய்திகள்