மாலத்தீவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. புதிய அதிபருக்கான சோதனை
|கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின்போது இந்திய ராணுவத்தை வெளியேற்றுவோம் என்ற முழக்கத்துடன் வெற்றி பெற்று அதிபர் ஆனவர் முகமது முய்சு.
மாலே:
மாலத்தீவின் 20-வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 17-ம் தேதி தேர்தலை நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், தேர்தல் தேதியில் மாற்றம் செய்யப்பட்டது.
தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 28-ம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு அதிபர் முகமது முய்சு ஒப்புதல் அளித்த பின்னர், தேர்தல் தேதி ஏப்ரல் மாதத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி இன்று காலையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெறுகிறது. 93 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
அதிபர் முகமது முய்சுவின் செயல்பாடுகளால் அண்டை நாடான இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் அவரது செல்வாக்கை நிரூபிப்பதற்கான முக்கிய சோதனையாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின்போது இந்திய ராணுவத்தை வெளியேற்றுவோம் என்ற முழக்கத்துடன் வெற்றி பெற்று அதிபர் ஆனவர் முகமது முய்சு. சீனாவின் ஆதரவாளராக அறியப்படும் முய்சு, இந்தியாவை வெளியேற்றுவோம் என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியதிலிருந்து மாலத்தீவு "புவிசார் அரசியல் ஹாட்ஸ்பாட்" ஆக மாறியுள்ளது. எனவே, அதிபர் முய்சுவுக்கு இந்த தேர்தல் கடும் போட்டியாக இருக்கும்.
அதிபர் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்ளிட்ட 368 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். இவர்களில் 130 பேர் சுயேட்சைகள். இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மே மாதம் பதவியேற்பார்கள்.