எங்கள் நாட்டில் இருந்து படைகளை திரும்பப்பெறுங்கள் - இந்தியாவுக்கு கெடு விதித்த மாலத்தீவு
|இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மாலி,
இந்தியாவுக்கு அருகே இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மாலத்தீவு. இந்நாட்டில் இந்திய படை வீரர்கள் 88 பேர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மாலத்தீவில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளை கொண்ட முகமது முய்சு வெற்றிபெற்று அதிபராக பொறுப்பேற்றார்.
இதனை தொடர்ந்து மாலத்தீவில் நிலைநிறுத்தியுள்ள படை வீரர்கள் 88 பேரையும் உடனடியாக திரும்பப்பெறும்படி இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால், மாலத்தீவில் உள்ள இந்திய படையினரை மத்திய அரசு இதுவரை திரும்பப்பெறவில்லை.
அதேவேளை, பிரதமர் மோடி கடந்த 2 மற்றும் 3-ந் தேதிகளில் லட்சத்தீவில் சுற்றுப்பயணம் செய்தார். அங்குள்ள கடற்கரையில் நடைபயிற்சி செய்தார். உரிய உபகரணங்களுடன், ஆழ்கடல் நீச்சல் பயிற்சியிலும் ஈடுபட்டார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டார். மேலும், ''சாகசத்தை விரும்புபவர்களுக்கு லட்சத்தீவுதான் சரியான தேர்வு'' என்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே, மாலத்தீவின் அரசியல்வாதிகள் சிலர் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை விமர்சித்து பிரதமர் மோடி மீதும் இந்தியர்கள் மீதும் இனரீதியாக, இழிவான வார்த்தைகளால் சமூக வலைதள பக்கங்களில் விமர்சித்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த இந்தியர்கள் பலர் மாலத்தீவுக்கு முன்பதிவு செய்த சுற்றுலா பயணத்தை ரத்து செய்தனர். மேலும், லட்சத்தீவில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் வகையில் பலரும் அந்த தீவுக்கு பயணிக்க தொடங்கினர். மாலத்தீவு செல்ல செய்திருந்த ஓட்டல் முன்பதிவுகள், விமான டிக்கெட்டுகளை இந்தியர்கள் பலரும் ரத்து செய்தனர். இந்தியர்களின் இந்த நடவடிக்கையால் சுற்றுலா துறையை பெரும்பாலும் நம்பியுள்ள மாலத்தீவு பொருளாதார சிக்கலை சந்திக்கலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கடந்த சில நாட்களுக்கு முன் சீனா சென்றார். மேலும், மாலத்தீவுக்கு கூடுதல் சுற்றுலா பயணிகளை அனுப்பி வைக்கும்படி சீனாவுக்கு முகமது முய்சு கோரிக்கை விடுத்தார்.
சீன பயணத்தை முடித்துக்கொண்டு மாலத்தீவு வந்த அதிபர் முகமது முய்சு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவை மறைமுகமாக விமர்சித்த அதிபர் முய்சு, நாங்கள் சிறிய நாடாக இருக்கலாம் ஆனால், அதற்காக எங்களை சீண்டிப்பார்க்க உங்களுக்கு உரிமம் கொடுக்கவில்லை' என்றார்.
இந்நிலையில், மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய படையினர் 88 பேரையும் மார்ச் 15ம் தேதிக்குள் திரும்பப்பெறும்படி இந்தியாவுக்கு மாலத்தீவு அதிபர் முய்சு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அதிபர் மாளிகை செய்தி தொடர்பு செயலாளர் கூறுகையில், இந்திய படையினர் மாலத்தீவில் தங்க முடியாது. இதுதான் அதிபர் முகமது முய்சு மற்றும் அவரின் அரசின் கொள்கையாகும்' என்றார்.