மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப்பின் தண்டனைக்காலம் பாதியாக குறைப்பு
|மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்தாவிட்டால், சிறைத்தண்டனை ஓராண்டுக்கு அதிகரிக்கப்படும் என மலேசிய மன்னிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர்,
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் 12 ஆண்டு சிறைத்தண்டனையை பாதியாகக் குறைத்துள்ளதாகவும், ஊழல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்னர் விதிக்கப்பட்ட அபராதத்தை குறைத்துள்ளதாகவும் மலேசிய மன்னிப்பு வாரியம் இன்று தெரிவித்துள்ளது.
மேலும் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் 210 மில்லியன் ரிங்கிட்டில்(44.5 மில்லியன் டாலர்) இருந்து 50 மில்லியன் ரிங்கிட்டாக (10.6 மில்லியன் டாலர்) குறைக்கப்படும் என்று மன்னிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. அபராதத் தொகையை செலுத்தாவிட்டால், சிறைத்தண்டனை ஓராண்டுக்கு அதிகரிக்கப்படும் என மலேசிய மன்னிப்பு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1எம்டிபி எனப்படும் வளர்ச்சி நிறுவன நிதி திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில் நஜீப்க்கு 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு, தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பின்னர் தண்டனையை குறைக்கக்கோரி பொது மன்னிப்பு வாரியத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். மன்னர் தலைமையில் நடந்த மன்னிப்பு வாரிய கூட்டத்தில், அவரின் தண்டனை குறைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், நஜிப் ஆகஸ்ட் 2028-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி விடுவிக்கப்படுவார் என்றும் மன்னிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
வழக்கு விவரம்
1எம்டிபி என்பது நஜீப் 2009-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் ஏற்படுத்தப்பட் ஒரு மலேசிய வளர்ச்சி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் நிதியிலிருந்து குறைந்தது 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கையாடல் செய்யப்பட்டு, அவரது நண்பர்களால் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகள் மூலம் மோசடி செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரின் வங்கிக் கணக்கிற்க்கு 700 மில்லியன் டாலர் பணம் வந்துள்ளது.
1எம்டிபி திட்டத்தின் ஒரு அங்கமாக இருந்த எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் அமைப்பிடமிருந்து 9.4 மில்லியன் டாலர்களை சட்டவிரோதமாகப் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டுகளில் அவர் 2020-ம் ஆண்டில் குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டார். 2022-ம் ஆண்டு அவரின் மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 970 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. அவரது மனைவி தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த முறைகேட்டின் மூளையாகக் கருதப்படும் மலேசிய நிதி நிறுவன உரிமையாளரால் ஏமாற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், தாம் நிரபராதி என்று கூறிவருகிறார்.