விமான விபத்தில் மலாவி நாட்டு துணை அதிபர் உயிரிழப்பு
|விமான விபத்தில் மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உயிரிழந்தார்.
லிலாங்குவே,
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா. இவர் மலாவி நாட்டின் தலைநகர் லிலாங்குவேயில் இருந்து முசுசூ என்ற நகருக்கு ராணுவ விமானம் மூலம் பயணம் செய்தார். இந்த பயணத்தின்போது அந்த விமானத்தில் 3 ராணுவ அதிகார்கள் உள்பட மொத்தம் 10 பேர் இருந்துள்ளனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், வானிலை சாதகமாக இல்லாததால் விமானத்தை தரையிறக்குமாறு தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில நிமிடங்களில் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், துணை அதிபர் பயணம் செய்த விமானம் விபத்திற்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாகவும், மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அதிபர் லசாரஸ் சக்வேரா உறுதிப்படுத்தியுள்ளார். விமானத்தின் உடைந்த பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.