< Back
உலக செய்திகள்
ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் நேருக்கு நேர் விவாதத்தில் வெற்றிபெற்றது யார்? வெளியான தகவல்
உலக செய்திகள்

ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் நேருக்கு நேர் விவாதத்தில் வெற்றிபெற்றது யார்? வெளியான தகவல்

தினத்தந்தி
|
28 Jun 2024 2:14 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர்கள் இருவரும் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர்.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியுள்ளார். அதேபோல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ளார்.

இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலுக்குமுன் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். இந்த விவாத நிகழ்ச்சிகளின்போது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து இரு வேட்பாளர்களும் விவாதிப்பார்கள். குறிப்பாக, வெளியுறவு கொள்கைகள், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு வேட்பாளர்களும் விவாதிப்பார்கள்.

அந்த வகையில் சிஎன்என் செய்தி நிறுவனம் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் இடையேயான நேருக்கு நேர் விவாதம் இன்று நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த விவாதத்தில் டிரம்ப், பைடன் என இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த விவாத நிகழ்ச்சி சிஎன்என் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில், விவாதத்தின் முடிவில் யார் வெற்றிபெற்றார் என்று விவாதத்தை டிவியில் பார்த்தவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அமெரிக்க வாக்காளர்கள் 565 பேரிடம் மெசேஜ் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 67 சதவிகிதம் பேர் விவாதத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை, 33 சதவிகிதம் பேர் மட்டுமே விவாதத்தில் பைடன் வெற்றிபெற்றதாக தெரிவித்துள்ளனர்.

விவாதம் நடைபெறுவதற்குமுன் நடத்தப்பட்ட ஆய்வில், டிரம்பிற்கு 55 சதவிகித ஆதரவும், பைடனுக்கு 45 சதவிகித ஆதரவும் இருந்தது. ஆனால், விவாதத்திற்கு பின் டிரம்பிற்கான ஆதரவு 67 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

மேலும், வாக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 57 சதவிகிதம்பேர் நாட்டை வழிநடத்தும் விவகாரத்தில் பைடன் மீது நம்பிக்கையில்லை என தெரிவித்துள்ளனர்.

நாட்டை வழிநடத்துவதில் டிரம்ப் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாக 36 சதவிகிதம்பேர் தெரிவித்துள்ளனர். ஆனால், 14 சதவிகிதம்பேர் மட்டுமே பைடன் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்