< Back
உலக செய்திகள்
தஜிகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சீனாவிலும் தாக்கம்
உலக செய்திகள்

தஜிகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சீனாவிலும் தாக்கம்

தினத்தந்தி
|
23 Feb 2023 8:05 PM GMT

தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது சீனாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பீஜிங்,

பூமிக்கு அடியில் ஏற்படுகிற அழுத்தம் காரணமாக புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்கிறபோது, அதன் மேற்பரப்பில் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இதுதான் நில நடுக்கம் ஆகும்.

புவித்தட்டுகள் அடிக்கடி மோதுகிற இடங்களில் நில நடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது.

இந்த மாதத் தொடக்கத்தில் துருக்கியிலும் அதன் அண்டை நாடான சிரியாவிலும் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான அடுக்கு மாடிக்குடியிருப்புகள் இடிந்து தரை மட்டமாகின. பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்

அதன் பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் தஜிகிஸ்தான் நாட்டில் சீன எல்லை அருகே நேற்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நில நடுக்கம் சீன எல்லையில் இருந்து 82 கி.மீ. தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் முர்கோப் நகரம் அருகே மையம் கொண்டிருந்தது.

இது ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. பின்னர் இது 6.8 புள்ளிகளாக பதிவானதாக தெரியவந்தது. இதை அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் உறுதி செய்தது.

நில நடுக்கத்தால் மக்கள் அதிர்ந்து போனார்கள். பீதி அடைந்த அவர்கள் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்து வெளியேறி திறந்தவெளி மைதானங்களிலும், வீதிகளிலும் தஞ்சம் புகுந்தனர்.

சீனாவிலும் தாக்கம்

சீனாவைப் பொறுத்தமட்டில், அதன் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் காஷ்கார், ஆர்டக்ஸ் பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டதாக சீன அரசின் டெலிவிஷன் சி.சி.டி.வி. தெரிவித்தது.

அதே நேரத்தில் அங்கு பலிகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. மின்வினியோகம், தகவல் தொடர்பு பாதித்ததாக தகவல் இல்லை.

இருப்பினும் ஜின்ஜியாங் ரெயில்வே துறை, ஆக்சு மற்றும் காஷ்கார் பிரிவில் ரெயில் போக்குவரத்தை நிறுத்தி வைத்தது.

சீனாவில் பாலங்கள், சுரங்கங்கள், சமிக்ஞை கட்டமைப்புகள் பாதிப்புக்குள்ளாகினவா என்று உள்ளூர் அதிகாரிகள் ஆய்வு செய்வதாக தகவல்கள் கூறுகின்றன.

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான், வெள்ளம், நில நடுக்கம், நிலச்சரிவு, பனிச்சரிவு, கடும் பனிமழை போன்ற இயற்கை பேரிடர்கள் நடப்பதற்கு வாய்ப்புள்ள நாடாக பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்