< Back
உலக செய்திகள்
ஷாப்பிங்கில் மேஜிக்; பறந்து, நடனம் ஆடிய எலுமிச்சை பழம்: நெட்டிசன்கள் ஆச்சரியம்
உலக செய்திகள்

ஷாப்பிங்கில் மேஜிக்; பறந்து, நடனம் ஆடிய எலுமிச்சை பழம்: நெட்டிசன்கள் ஆச்சரியம்

தினத்தந்தி
|
22 May 2023 7:53 PM IST

ஷாப்பிங்கில் பெண்ணிடம் இருந்த எலுமிச்சை பழம் ஒன்றை கொண்டு மேஜிக் நிபுணர் செய்த மாயாஜால காட்சிகள் நெட்டிசன்களை ஆச்சரியம் அடைய செய்து உள்ளன.

பாரீஸ்,

நமக்கு எலுமிச்சை பழம் கிடைத்தால், அதனை சாறு பிழிந்து, ஜூசாக்கி சாப்பிடுவோம். ஆனால், அதனை உயர பறக்க வைத்து, நடனம் ஆட செய்து உயிருள்ள ஒன்றாக ஒருவர் மாற்றி உள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மேஜிக் நிபுணர் சேவியர் மோர்டிமர். மேஜிக் செய்வதில் நிபுணத்துவம் பெற்றவரான இவர், தெருக்களில், ஓட்டல்களில், உடற்பயிற்சி கூடம், பீச், பூங்கா என பல இடங்களில் பொது மக்களிடம் தனது மேஜிக் திறனை வெளிப்படுத்தி அவர்களை ஆச்சரியம் அடைய செய்து வருகிறார்.

இதுபற்றிய வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அவற்றில் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ நெட்டிசன்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதன்படி, மளிகை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்கு அவர் சென்றுள்ளார். அந்த கடையில் வீட்டுக்கு வேண்டிய காய்கறி உள்ளிட்ட பொருட்களை பெண் ஒருவர் கூடையில் இருந்து எடுத்து தனது பையில் போட்டபடி இருந்துள்ளார்.

அவரை பின்னால் இருந்து நெருங்கி சென்ற சேவியர், அவர் எடுக்க இருந்த எலுமிச்சை பழம் ஒன்றை, அவரை முந்தி கொண்டு, எடுத்து தனது பையில் போட்டார்.

இதன்பின்பு, அதனை அப்படியே தலைகீழாக கொண்டு சென்று அந்தரத்தில் நிற்க வைக்க முயன்றார். சிறிது நேரம் அப்படியே நின்ற பழம் பின்னர் பைக்குள் இருந்தபடி சரிந்தது. முயற்சியை விடாத அவர், மீண்டும் அதனை சேவியர் தூக்கி நிறுத்துகிறார்.

இந்த முறை அந்த பழம் அப்படியே நின்றது. இதனை தொடர்ந்து, பையுடன் அதனை அப்படியே அந்தரத்தில் விட்டதும், அந்த பெரிய அளவிலான எலுமிச்சை பழம், பைக்குள் இருந்தபடி உயர பறக்கிறது.

நடனம் ஆடியபடியும், நாலாபுறமும் சுழன்று, பறந்து சென்றபடியும் இருந்த அந்த பழம் கடைசியில் கீழே வருகிறது. அதனை பெரிய அளவு கொண்ட கண்ணாடி பாட்டில் ஒன்றில் போட்டு மூடுகிறார்.

இதன்பின் கூடை ஒன்றை எடுத்து, மறு கையால் பாட்டிலின் மூடியை திறந்ததும், பறந்து வந்த அந்த பழம் அவரது கூடையில் விழுந்தது. அதனை எடுத்து கொண்டு சேவியர் செல்கிறார்.

இவற்றை எல்லாம் ஆச்சரியமுடன் அந்த பெண் பார்த்தபடி இருக்கிறார். இந்த வீடியோ வெளிவந்த பின் லட்சக்கணக்கானோரை ஈர்த்து உள்ளது. நெட்டிசன்களும் எப்படி இது சாத்தியம் என ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்