< Back
உலக செய்திகள்
லண்டன்:  2 மணிநேரம் இருளில் மூழ்கிய மெட்ரோ ரெயிலில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்
உலக செய்திகள்

லண்டன்: 2 மணிநேரம் இருளில் மூழ்கிய மெட்ரோ ரெயிலில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்

தினத்தந்தி
|
11 Dec 2023 6:54 PM IST

போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு பின்னர், இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில், பாடிங்டன் மற்றும் ஆக்டன் ஸ்டேசன் ஆகிய பகுதிகளுக்கு இடையே கடந்த வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் ஒன்று வந்தபோது, திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனால், 2 மணிநேரம் ரெயிலின் உள்ளே பயணிகள் இருளில் பரிதவித்தனர். அவர்களில் பலர் இருட்டில் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். இந்த சூழலை பயன்படுத்தி கொண்ட நபர் ஒருவர், இளம்பெண் ஒருவரை தகாத முறையில் பிடித்து, சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

ரெயில் இருளில் நின்ற சம்பவத்தில் சிக்கி 2 பயணிகள் காயமடைந்தனர். சம்பவம் பற்றி சக பயணி ஒருவர் கூறும்போது, விளக்குகள் அணைந்ததும் சஞ்சலம் ஏற்படுத்தும் சம்பவம் நடந்தது. அது யார் என்று எனக்கு தெரியாது. ஆனால், எனது பெட்டியில் இருந்த இளம்பெண் ஒருவர், அட கடவுளே. எதற்காக என்னை தொடுகிறாய்? என அலறினார். ஆடவர் ஒருவர் அவரை தகாத முறையில் தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இந்த சத்தம் கேட்டதும், பெண்ணுக்கு பாதுகாப்பாக முன்வந்த மற்றொரு நபர், அந்த நபருக்கு எதிராக சத்தம் போட்டார். ஆனால் என்னால் பார்க்கவோ, வேறு விசயங்களை கேட்கவோ முடியவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்தது பற்றி இங்கிலாந்து போக்குவரத்து போலீசார் உறுதிப்படுத்தியதுடன், ஒரு நபர் கைது செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்தனர். அந்நபர் பின்னர் விடுவிக்கப்பட்டார். எனினும், சம்பவத்தின்போது காணப்பட்ட நிலைமை மற்றும் சூழல் பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்