< Back
உலக செய்திகள்
லிஸ் டிரஸ் ராஜினாமா; இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவாரா ரிஷி சுனக்?
உலக செய்திகள்

லிஸ் டிரஸ் ராஜினாமா; இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவாரா ரிஷி சுனக்?

தினத்தந்தி
|
20 Oct 2022 8:52 PM IST

ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

லண்டன்,

இங்கிலாந்தில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நாட்டின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த லிஸ் டிரஸ், கடந்த செப்டம்பர் 6-ந்தேதி பதவியேற்றார். இதன் பிறகு நடைபெற்ற மினி பட்ஜெட் கூட்டத்தொடரில், லிஸ் டிரஸ் பல்வேறு வரி குறைப்பு திட்டங்களை வெளியிட்டார். ஆனால் அந்த திட்டங்களுக்கு அவரது சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

இதையடுத்து நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பிரதமர் லிஸ் டிரஸ் அதிரடியாக பதவிநீக்கம் செய்தார். அவருக்கு பதிலாக ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் உள்துறை மந்திரி பதவியில் இருந்து விலகினார். இதனால் இங்கிலாந்து அமைச்சரவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். என்னை தேர்வு செய்ததற்கான இலக்கை அடைய முடியாததால் ராஜினாமா செய்கிறேன் என லிஸ் டிரஸ் கூறியிருக்கிறார். பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்ததால், இங்கிலாந்தின் வரலாற்றில் மிகக்குறுகிய காலம் பதவியில் இருந்த பிரதமர் என்ற பெயரை லிஸ் டிரஸ் பெற்றுள்ளார்.

மேலும் இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் தற்போது அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஜெரேமி ஹண்ட், தான் தேர்தலில் போடியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இன்னும் ஒரு வாரத்தில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதே சமயம் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

இவர்கள் தவிர கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பென்னி மார்டண்ட், இங்கிலாந்தின் பாதுகாப்புத்துறை செயலாளர் பென் வாலேஸ் ஆகியோரும் பிரதமர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது. எனவே வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகே, வெற்றி வாய்ப்புகளை கணிக்கும் சாத்தியங்கள் ஏற்படும். இருப்பினும் இந்த தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால், இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்கும் முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்