அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கும் மசோதா அறிமுகம்
|அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றாக தீபாவளி உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்பட பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்களால் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில் அமெரிக்காவில் பெண் எம்.பி. கிரேஸ் மெங் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கும் ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இதற்கு பல்வேறு எம்.பி.க்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும்போது கிரேஸ் மெங் கூறுகையில், `தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து அமெரிக்கர்கள் தெரிந்து கொள்ளவும், அதனை குடும்பத்துடன் இணைந்து கொண்டாடவும் இந்த சட்டம் வாய்ப்பாக இருக்கும்' என கூறினார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் தீபாவளி பண்டிகைக்கு அதிகாரபூர்வ விடுமுறை அளிக்கும் சட்டத்தை சமீபத்தில் இயற்றிய நிலையில் தற்போது இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.